‘என்னிடம் இருட்டைக் கொண்டு வா, நான் தான் அதை விலக்கினேன் என்று ஒப்புக்கொள்கிறேன் ‘
வெளிச்சம்
கல்வியும் அறிதலும்
நம் ஊரில் ஓர் சிறிய பட்டாம்பூச்சியின் சிறகின் அசைவால், வேறு எங்கோ ஓர் ஊரில் சூறாவளி ஏற்படும்- என்பது கயோஸ் கோட்பாடு.நம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்து வேலைகளின் எதிரொளியும் நாம் காண்பதில்லை. நாம் காண்பினும் அதை அறிவதில்லை. நம் இதிகாசங்களில் அடிமைத்தனம் என்றாலே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை தான் குறிக்கும். அப்பொழுது விதைக்கப்பட்ட ஓர் விதை ஆலமாக இன்று வரை வேறுன்றி அந்நிய முதலீடு என்ற நஞ்சைப் பருகி வளர்ந்து வருகிறது. உதாரணமாக நாம் அன்றாட உடுத்தும் உடைகளை எடுத்துக் கொள்வோம். பல ஆயிரம் கொடுத்து, பிரமாண்டமான ஓர் அங்காடியில் செருப்பு தயாரிக்கும் ஓர் அயல்நாட்டவரின் ‘பிராண்டை’ நம் நெஞ்சின் மேல் சுமந்து இலவச விளம்பரம் செய்கிறோம். அத்துடன் குழந்தைகளின் கல்விக்காக நன்கொடையும் சேர்த்து தருகிறோம். ஆனால் நாம் வாங்கிய துணி பல்லாயிர குழந்தைகளின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை நாம் அறிவதில்லை.
‘அதை நான் செய்யவில்லை’ என்ற உங்கள் குரள் கேட்கிறது. ஆனால் சற்றே பொறுமையுடன் கவனியுங்கள். உலகில் ஐந்தில் ஒரு பங்கு பருத்தி உற்பத்தி நம் நாட்டில் தான் நடக்கிறது. அதிலும் நாற்பது சதவீதம் தமிழகத்தில், நான்கு இலட்ச தொழிலாளர்களால் தறி ஆக்கப் பட்டு அந்நிய ‘பிராண்ட்’ களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.’நல்ல வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் ஒன்று தானே இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என்று நீங்கள் கேட்கலாம்
அதற்கு முன்னால் ஓர் சிறுமியின் கதையைக் கேட்போமா
பிறப்பு என்ற விபத்தினால் தீண்டப்படாத ஜாதியனரின் மகளாக ஓர் குக்கிராமத்தில் பிறந்தேன். நான் செய்யாத தவறிற்கு வீடு, உணவு,பிற உரிமைகள் நிராகரிக்கப்பட்டேன். இவ்வாரே என் வாழ்வில் பதினான்கு வருடங்கள் விதியைப் பழித்தும் விடியலைத் தேடியும் கழிந்தன. என் நெருங்கிய தோழியின் அண்ணன் ராமு, அப்பொழுது தான் பட்டினம் போய் திரும்பினார். பட்டினத்தைப் பற்றி அவர் அனுபவங்களை ஒரு நாள் முழுவதும் எங்களிடம் விவரித்தார். பிரமிப்பாக இருந்தது. ஊரில் உள்ள பிள்ளைகளை அழைத்துச் சென்று இலவசமாக மூன்று வேலை உணவு, தங்க இடம், கை நிறையச் சம்பளம் வாங்கித் தருவதாக கூறினார்.
நான் தேடிய விடியலை அடைந்து விட்டதாக எண்ணினேன். ராமு அண்ணன் என் அம்மாவுடனும் பேசி, என்னை அழைத்து செல்வதற்கான அனுமதியையும் பெற்றார். முன்பணமும் தந்தார்.
அடுத்த வாரமே,அண்ணன் எங்கள் கிராமத்திற்கு ஓர் பெரிய பேருந்தை வரவழைத்தார். என்னைப் போல பலரும் விடியலைத் தேடி அந்தச் சொகுசு பேருந்தில் இருந்தனர். ராமு அண்ணன் பேருந்தில் ஏறியவுடன் என்னை நோக்கி புன்னகைத்தார்.நானும் மகிழ்ச்சியில் மலர்ந்தேன். பேருந்து நகரத்தை நோக்கி நகர்ந்தது. அந்த நகரம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. சொர்க்கம் ஒரு வேலை இது போல தான் இருக்குமோ என்று வியந்தேன். ஓர் பெரிய அரண்மனையின் முன் அந்தப் பேருந்து நின்றது.நான்கு ஐந்து அண்ணன்கள் சேர்ந்து , பெரிய இரும்பு கதவை திறந்து எங்களைப் புன்னகையுடன் வரவேற்றனர்.உள்ளே சென்று பேருந்தை விட்டு இறங்கியவுடன் நாங்கள் கொண்டு வந்த பையை எடுத்து உள்ளே சென்றனர். அந்த அரண்மனையின் இளவரசியைப் போல மனதில் உணர்ந்தேன். மகிழ்ந்தேன்.
ஓர் அழகான…ஓர் பெரிய கதவு கொண்ட அறைக்குள்ளே அழைத்துச் சென்றனர். டப் என்று அந்தக் கதவு என் பின்னால் மூடியது. இருட்டால் அந்த அரை சூழ்ந்தது. என்ன நடக்கிறது என்று அறியாமல் பயத்தில் கூச்சலிட்டேன். திடீர் என்று சிரிப்பு சப்தத்தால் சூழ பட்டேன். பயத்தில் இன்னும் சப்தமாக கூச்சலிட்டேன். ‘ஏய் கத்தாத, கத்தினா அடிப்பாங்க’ என்று மெல்ல ஓர் குரல் காதின் அருகே வினவியது. என்னைப் போல இன்னும் சில சிறுமிகள் அறைக்குள் இருப்பதை உணர்ந்தேன். கண்ணீரால் தொடைகளும் ஈரமாயின.இரவு முழுவதும் இருட்டில் கழிந்தது.அடுத்த நாள் விடியற்காலையில் கதவுகள் திறந்தன. யாரேனும் அழுதாலோ, கூச்சலிட்டாலோ லத்தியினால் முட்டியில் அடிப்பதற்கு என்றே ஒரு அண்ணன் இருந்தார்.
அவர் பெயர் ‘வார்டன் சார்’.
தங்கும் விடுதியில் இருந்து பேருந்து புறப்பட்டு, அரண்மனையின் உள்ளேயே மற்றுமொரு கட்டிடத்திற்குச் சென்றது. அங்கும் பெரிய அண்ணாக்கள் கதவருகே இருந்தன.என் உடம்பு முழுவதும் தடவிய பிறகே உள்ளே அனுமதித்தனர்.ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை .உள்ளே சென்றால்,ஓர் மிகப்பெரிய அறை.எங்கள் கிராமத்தின் அளவிற்கு இருக்கும். என்னைப் போலவே ஆயிரக்கணக்கான சிறுமிகள், தலை நிமிராமல் ஏதோ செய்து கொண்டு இருந்தனர். ஓர் சப்தமும் வரவில்லை.இயந்திரங்களின் சிரிப்பு மட்டுமே எப்பொழுதும் எதிரொலித்தது.ஒரு வாரத்தில் எனக்கென்ற ஓர் இடமும் கொடுத்தனர். பத்து மணி நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும். தைத்து முடித்த சட்டையில்,ஓர் துண்டு சீட்டைச் சேர்க்க வேண்டும். அதான் என் வேலை.அதில் ‘ Child Labour Free’ என்று ஏனோ ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். அதன் அர்த்தம் புரிந்ததே இல்லை.சற்றே சோர்வு அடைந்தாலும் ‘வார்டன்’ மிகவும் கடினமாக வார்த்தைளால் அவமதிப்பார்.
ஓர் இரவு விடுதிக்கு வந்து அனைவரையும் உறக்கத்தில் இருந்து அடித்து எழுப்பி இழுத்துச் சென்றனர். ஏதோ ‘50% off’ ஆர்டரை முடிக்க வேண்டுமாம். இதைப் போல பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருந்தன. யாரிடமும் சொல்வதற்கு கூட வாய்ப்பு இல்லை. யாரிடம் சொன்னாலும் விடிவு பிறக்கா ஓர் நிலை. அம்மாவிடம் அழுதால் ‘இதெல்லாம் கொஞ்சம் பொருதுக்கோமா, கை நீட்டி காச வாங்கிட்டோம், இன்னும் கொஞ்சம் மாசம் தாமா’ என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே சொன்னார்கள்.இதே போல சில வருடங்கள் சொல்லத் தகாத வன்முறைகளுடன் கழிந்தன.பத்து மணி நேரம் வேலை பார்த்த பிறகு,நான்கு மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும்.செய்யாவிட்டால் ‘வார்டன் சார்’ என்னையும்
அவர் அறைக்குள் அழைதுவிடுவாரோ என்ற
பயத்திலேயே நாட்கள் கழிந்தன.
என் மாத விடாய் காரணமாக கூடுதலாக நான்கு மணி நேரம் நிற்க இயலவில்லை. வார்டன் சார் அவர் அறைக்கு அழைத்தும்,செல்ல மறுத்து விட்டேன். அடுத்த நாள் எல்லோரும் மதியம் உணவிற்காக மெஸ் ஹாலில், கூடி இருந்தோம். அனைவரின் முன்னால், வார்டன் சார் பாவாடையை கீழே அவிழ்த்தார். என் சுய மரியாதையே உயிர் என்று வாழ்ந்த நான் அந்நொடியே கீழே அவிழ்ந்தேன், மொட்டை மாடியில் இருந்து. என் இரத்தத்தால் சாயம் பூசிய ஆடையையே இப்பொழுது இந்த உலகமே கொண்டாடுகிறது. என் இரத்தத்தினால் சாயம் பூசப்பட்ட உடையை நீயும் எங்கேனும் கண்டாயோ ?
இது ஆடை என்ற ஓர் பொருளின் செயல்முறையில் இருக்கும் சமுதாய கேடுகளில் நூற்றில் ஒரு பங்கு. இதே போல சுற்றுச்சூழல்,நாகரீகம் மற்றும் இதை சார்ந்த அரசியல் என்ற பல கோணங்களில் இருந்து இதை ஆராயலாம். ஓர் பொருளின் செயல்முறையைப் புரிந்து கொள்வது, அனைவருக்கும் அவசியம். அதிலும் புரிந்து கொண்டு நுகரும் தன்மை குழந்தைகளிடம் இன்றி அமையாத ஒன்றாக இக்காலகட்டத்தில் அமைகிறது. இந்த சிறு அறியாமையை போக்குதலே பெரிய மாற்றத்திற்கான மூலம்.
இது தான் என் கதையின் ஆரம்பம்.
என் பெயர் சுமங்கலி.அண்ணா.
அறிதலும் புரிதலும்
இன்றைய கல்வி முறையில், பல பயிற்சிகள் தேர்சசியைச் சார்ந்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்குள்ளே தேடலை ஏற்படுத்த இயலாத ஓர் அமைப்பு.நாளடைவில் மனித இனத்தை வேறுபடுத்தும் யோசிக்கும் திரணையும் இழக்கச் செய்கிறது. இந்த நிலையில் யோசிக்கும் திறனை வளர்ப்பது, கணமான கல்லை கையால் செதுக்குவது போல. ஆதலால் தங்களுக்கென்ற ஓர் அடையாளம் அல்லது ஓர் கருத்தாக்கம் இன்றி திகழ்கின்றனர். கேள்வி கேட்கத் தூண்டாமல், எண்ணங்களை அடிமைப்படுத்திய ஓர் தயாரிப்பாய் விளங்குகிறார்கள். இந்த விழுக்காடு வருடா வருடம் ஏற்ற நிலையில் உள்ளது. இதற்குப் காரணம் பல தரப்பட்டது, பள்ளிகள் மட்டுமே அல்ல. நாம் அன்றாட வாழ்வில் நம் எண்ணங்களுக்கும், நம் செயலுக்கும் நாமே பொறுப்பு ஆகையில், அங்கு ஓர் அர்த்தமுள்ள புரிதல் நம் முழு சுதந்திரத்துடன் நடக்கிறது. அத்தகைய புரிதல் ஏற்பட புறிதலே சிறந்த கருவி ஆகிறது. பள்ளிகள் சிறு வயது முதலேயே இந்த சுதந்திரத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக திகழ வேண்டும் .
புரிதலும் புறிதலும்
நாம் பள்ளியில் நெகிழியைப் பற்றி சுற்றுசூழலியலில் படித்து இருப்போம். நெகிழி இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் ,நெகிழியைப் பயன் படுத்த மாட்டோம்’ என்றெல்லாம் உறுதி மொழி ஏற்று ஊர்வலம் கூட சென்று இருக்கலாம். ஆனால் அது யாராலோ செய்ய சொல்லப் பட்ட ஒன்று. புரிந்து செய்த மாணவர்களும் ‘ கேடு விளைவிக்கும்’ என்று மட்டுமே அறிவார்கள். எதனால் அவ்வாறு ஆகிறது என்பதைப் பற்றி விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே, அதனைப் புறிய முடியும்.அதை அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேர்ப்பதுக்கென்று பல கருவிகளும் யுக்திகளும் தேவை படுகின்றன. அதே போல நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வோர் பொருளின் ஆக்கத்தினால் சமுதாய மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொள்வது அவசியம். அதன் மூலம்,இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் ஒன்றோடொன்று இணைந்து பின்னப்பட்டது என்பது புலப்படும். இதன் வாயிலாக ‘நான்’ என்ற உயிரின் தன்மையையும் உணர இயலும். அவ்வாறு திகழ்ந்தால் நாம் செய்யும் அனைத்து கர்மாக்களும் ஒரு வித உள் உணர்வுடன் கூடி உண்மையை நோக்கியே இருக்கும்.
புறிதலும் அகர்மாவும்
சூரியனின் கதிர்கள் பூமியை வந்து அடைந்ததும் உயிர்கள் பல மீண்டும் பிறக்கின்றன. நம் உடல் இடை விடாது அதன் ஓர் கர்மம் ஆகிய சுவாசிப்பை செய்து கொண்டே தான் இருக்கிறது. இயற்கையின் எல்லா நிகழ்வுகளும் எந்த ஓர் பயனையும் எதிர்பாராது நடந்து கொண்டே தான் இருக்கின்றது ,மனிதக் குலத்தின் கர்மங்களைத் தவிர. அன்பால் ஆன இந்த ப்ரஹ்மமாண்டத்தில் உயிர்த்திற்கும் ஒவ்வோர் அணுவும் ஆனதும் , ஆவதும் ஓர் கர்மத்தின் மூலமே . மனித உருவ பெற்ற ஒவ்வோர் அணுவும் ஏதோ ஓர் கர்மத்தினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தை அனுபவிக்க முடிகிறது. நாம் உணர்ந்து செய்பவை சில , உணராமல் இந்நொடியிலும் நடந்து கொண்டு இருப்பவை பல.
நாம் செய்யும் எந்த ஓர் கர்மமும் அதற்குரிய பயனை சார்ந்தே , பயனை நோக்கி மட்டுமே இருக்கிறது. ‘நான் ஒரு கர்மத்தை செய்கிறேன்’ என்ற உணர்வே கர்மத்தின் முதல் படி. இந்த வகை கர்மா நம் அன்றாட வாழ்வில் பலரும் பின்பற்றும் ஒன்றே. இந்த கர்மா தர்மத்தை சார்ந்தே அமைய வேண்டும். இதில், நாம் செய்யும் கர்மத்தின் சுமை தாங்கியாகத் திகழ்கிறோம்..
தான் செய்யும் கர்மத்தின் சுமை அறியாமல் இருக்க வேண்டுமாயின் அதில் அன்பு நிறைந்திருக்க வேண்டும். அன்பு சேர்க்கையில் பயனை எதிர்பாரா தன்மை பிறக்கிறது – அத்தருணத்தில் சுதர்மத்துடன் செய்யும் கரமா, விகர்மமாக மாறுகிறது. நம் ஆழ் மனதில் படிந்த மண்ணை அகற்றி, பரிசுத்த நீராய் மாற்றும் ஓர் கருவியாக விகர்மா விளங்குகிறது.
இவ்வித விகர்மம் தொடர்ந்து நடக்கையால், கர்மத்தின் சுமை அற்று எளிதாகி விடுகிறது. விகர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதால் , கர்மம் என்ற தன்மை அற்றுப் போகிறது. நீங்கள் உங்கள் இரு சிறு கால்களைக் கொண்டு முதன் முதலாய் நடக்க முயற்சிக்கையில், அந்த கர்மா எத்தனைக் கடினமாக இருந்திருக்கும். அது இப்பொழுது கர்மம் இல்லா நிலைக்கு மேம்பட்டிருக்கிறது. நம் உள் நிலையின் மாற்றத்தால்
நாம் செய்யும் அனைத்து கர்மாக்களும், கர்மம் செய்யாதோர் நிலைக்கு மேம்படுமே ஆனால் ,அங்கு அன்பு மட்டுமே நிலைத்து இருக்கும். செய்யும் கர்மமும், கர்மம் செய்பவனும் அன்பில் கரைந்து , அன்பாய் ஆகையில் – அகர்மா அங்கு விதைக்கப் படுகிறது.
கற்பிப்பது அகர்மம் ஆகும் பொழுது,கற்பதும் அகர்மம் ஆகிவிடுகிறது. ‘நான்’ என்ற மாயை அழிக்கப்படுகிறது. அதில் இருந்து தோன்றும் உண்மையே, அந்த பேராற்றலின் தாக்கத்திற்குள் நம்மை அணைக்கிறது. வழிநடத்துகிறது.
அகர்மாவை விதைக்க அழைக்கிறோம்.
விதைப்பாயா !