ஆசிச் சொல்

இறப்பிற்காகக் காசியில்  காத்திருந்து உயிர் துறந்த ஆன்மாக்களின் எனது தந்தை வழி பாட்டியும்  ஒருவர். அதி காலையில்  காலபைரவர் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகக், கங்கையில் நீராடுவதற்காகச் சென்று இருக்கிறார்கள். பனிமூட்டம் காரணமாகப் படித்துறை கண்களுக்குத் தெரியாமல்,உயரத்திலிருந்து, கால் தவறி கீழே விழுந்து அங்குள்ள ஒரு சிறு சிவன் கோவிலின் முன் கபாலம்  உடைந்து மோட்சம் பெற்றார். என் பாட்டியின் கடைசி விருப்பம், ‘நான் அனாதையாகத் தான் போய்ச் சேர வேண்டும்’ என்பதுதான்.தனது தீராத மன வைராக்கியத்தால்  காசியின் அணையா ஜோதியான  ‘மணிகர்ணிகா காட்’ டில் அனாதை கொள்ளி கிடைத்தது. 

நான் முதன் முதலில் காசிக்குச் சென்றது, எனது பாட்டியின் இறுதி காரியங்களுக்குத் தான். நான் அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் முதன் முதலில் வட இந்தியாவிற்குச் செல்வதும்  அப்பொழுது தான். அங்கே பதினான்கு நாட்களுக்கு மேலாகத் தங்கி இருந்தோம்.தினமும் கங்கையின் வெல்வேறு படித்துறைகளில் காரியம் நடந்தது. சில சடங்குகளைப்  படகில் நதியின்  உள் சென்று செய்ததும் உண்டு. நீருடன் நெருங்கிய உரையாடல் அப்புள்ளியில் தான் தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பத்து வருடங்கள் கழிந்து, நீருடனான ஆழ்தொடர்பு ‘மேல்கோட்டை’ யில் மீண்டும் நிகழ்ந்தது. ஒரு வருட காலம் அந்த மலையில் சுரக்கும் நீரின் தன்மையை, அங்குள்ள குளங்கள் வழியாக அறிந்து கொள்ள முற்பட்டேன். ‘ முன்பு ஒரு காலத்தில் 108 குளங்கள் இங்கு இருந்தது என்று என் தாத்தா காலத்தில் சொல்லுவார்கள்’ என்ற ஒற்றை வரியை வைத்து குளங்களின் தேடலைத் தொடங்கினோம். என் பாட்டியின் சிறு வைராக்கியம் என்னிடம் எஞ்சி இருந்திருக்கும்  என்று நினைக்கிறேன். என்னை வேறொரு படிநிலைக்கு அழைத்துச் சென்றது இந்த குளங்களின் தேடல். மீண்டும் நிறைய மனிதர்கள் , முகங்கள், அனுபவங்கள். இத்தருணத்தில் வினோபா பாவேயுடன் நாடெங்கும்  நடந்தவரின் பேரன், மேல்கோட்டையில் வசிக்கும்  பார்த்தசாரதியை  அகப்பூர்வமாக நினைத்துக் கொள்கிறேன்.

என்னிடம் அப்பொழுது இருந்த புரிதலுக்கு, மேல்கோட்டையில் உள்ள  108 குளங்களும் புனரமைக்கப் பட வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது. இந்த கால கட்டத்தில்  நீர் நிலைகள் தொடர்பாக வேலை செய்யும் பலரை சந்தித்தேன். இந்தியாவின்  ‘தண்ணீர் மனிதர்கள்’ என்று அழைக்கப்படும் பலரிடம் நேரில் சென்று, இது குறித்து பேசினேன். ‘செத்துப்போன பிணத்திற்கு நீ ஏன் ஆபரேஷன் செய்யப் பார்க்கிறாய் ’ என்று கேட்டனர் .என்னிடம் ஒரு பெரும் திசை தெரியாத  ஏக்கம் ஒன்று இருந்தது. நான் இப்பொழுது உணர்கிறேன் அது என்னவென்று. ‘ நம்பிக்கைச்  சொல்’ – அது இறுதியில்  குக்கூ சிவராஜ் அண்ணனிடம் தான் கிடைத்தது . ( அவர் இதை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அது நான் அறிந்த உண்மை. ) 

அகமதாபாத், கேதார்நாத், திருவண்ணாமலை இந்த மூன்று நிலத்தின் அகமும் எனது திருமணத்தை, எனது வாழ்வைத் தீர்மானித்தது. ஹைதராபாதில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட பழைய குளங்களுக்குச் சென்று பார்த்தோம்.  அரச மரமும், ஆல மரமும் ஒரே வேரில் சேர்ந்து வளரும் ஒரு மண்ணை கண்டடைந்தோம். ஆயிரம் வருட அணையா ஜோதியைப் பெற்ற ஒரு கோவில், அதன் அருகே உள்ள குளத்தின் படித்துறையில்  தான் எங்கள் திருமணம், பேர்  அன்புடனும் பிரார்த்தனையுடனும் நடந்தது. விழாவிற்கு வரும் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காகச் சிறு பொருட்களைச் சேர்த்து வந்தோம். ஒரு சிறு புத்தகமும் அச்சிட்டுக் கொடுக்க முடிவானது.

நன்றாக ஞாபகம் இருக்கிறது, அப்பொழுது அண்ணன் மதுரையில் அருணுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். “ ஹையோ….  ஹையோ … இந்த வண்டியிலிருந்து அப்படியே  குதிச்சிருவேன்… வாய்ப்பே இல்லை கௌசிக் … இது வேறு ஒரு மாஜிக் ..இந்த  புக் … கண்டிப்பா போற்று ல்லாம் “ என்ற சிவராஜின் அண்ணாவின் குறள் இப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது .பெரும் கடன் சுமையின் இடையே நண்பர்களின் சிறு தொகை உதவியால் தி பொண்ட்ஸ் ஆர் ஸ்டில் ரெலெவன்ட்” ( The ponds are still relevant )  என்ற புத்தகம் ‘தன்னறம் பதிப்பகம்’ மூலம் பதிவானது. இப்பொழுது உலகம் முழுவதும் அச்சு வடிவில் ஆங்கிலத்தில் கிடைக்கப்படும் ஒரே படைப்பு இதுவே.

‘அனுபம் மிஸ்ரா’ என்ற தன்மையின் அறிமுகம் இந்த  புத்தகம் மூலமே.  சில மாதங்கள் கழித்து ‘ குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு’ என்று தமிழில் மொழிபெயர்த்து, கோயம்புத்தூரில் ஓர்  மலையடிவாரத்தில்  சுனை திறக்கா ஒரு கிணற்றடியில் பிரார்த்தனையாக  இப்புத்தகம் வெளியிடப்பட்டது. இதெல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று எண்ணுவதற்கு இப்பொழுதும் நினைத்துப் பார்த்தால் பெரும் மலைப்பாக இருக்கிறது, இந்தப் புத்தகம் எங்கெல்லாமோ சென்று சேர்ந்திருக்கிறது. லடாக்கில் நடந்த ‘Economics of Happiness’ கூடுகையில் வந்த அனைவருக்கும் இந்தப் புத்தகம் பரிசளிக்கப்பட்டது. 

2021 – ஆம் ஆண்டின் அகர்மாவின் நாள்காட்டி அனுபம் மிஸ்ராவிற்கு சமர்ப்பணமாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் அவரின் நல்ல 12 புகைப்படங்கள் இணையத்தில் எங்குமே இல்லை. அனுபம் மிஷர்வுடன் தொடர்புடைய அனைவரையும் தொடர்பு கொண்டோம். இந்தியாவின் புகழ் பெற்ற ஓர் ஆங்கில மாத இதழிடம்  இருந்தது. அவர்களைத் தொடர்பு கொண்டோம், டிசம்பர் இறுதி வரை காத்திருந்தோம் , பின் தர மறுத்தனர். இறுதியில் ‘ ஊர்க்  கிணறுப்  புனரமைப்பு’ இயக்கத்தின் மூலம் சுனைத்திறந்த கிணறுகளின் புகைப்படங்கள் கொண்டு, வடிவமைக்கப்பட்டது .

அது அனுபம் மிஸ்ராவின் உத்தரவு என்பதை, பரிபூர்ணமாக உணர்ந்தோம். 

சில நாட்கள் முன்பு, நாங்கள் முன்னால் தங்கியிருந்த ‘சுப்பு ஹோம்’ க்கு எத்தேர்ச்சியாக்கச் சென்றிருந்தோம். பூனைக் குட்டிகளைப் பார்ப்பதற்காக. அது அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால், தபால் பெட்டி அனைவருக்கும் பொதுவாகக் கீழே ஓர் இடத்தில் தான் குப்பை மங்கி  இருக்கும். அப்பொழுது தான் அருணிமா இந்த தபாலை எடுத்து “ உனக்குத் தான்..” என்று கொடுத்துவிட்டு, பூனைகளிடம் விளையாடப்  போய்விட்டால். நான் அதைப் படித்து விட்டு, அந்த இடத்திலேயே அசையாப் பொருள் போல் நின்று விட்டேன். மீண்டும் மீண்டும் அந்த மஞ்சக் கடிதாசியைத்  தடவிப் பார்க்கிறேன், எனக்கு நானே சிரித்துக் கொள்கிறேன். 

தொலைவிலிருந்து அருணிமா இதைப்  பார்த்து விட்டு

“ ஏன் இப்படிச் சிரிக்கிற ‘ என்றாள்.

கடிதத்தைக் காண்பித்தேன் .

அவள் படித்து விட்டு…. “ நீ கடைசியாக இப்படி  சிரிச்சது

  ‘ குக்கூ கான்வர்சேசன்- பாம்பே ஜெயஸ்ரீ’  பாத்த அப்போ” என்றாள்.

பூனை ‘மியாவ்’ என்றது.

இந்த 50p தபாலை நாட்டின் எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் ,அனைத்து கால்களுக்கும் சமர்ப்பணம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top