நம்பிக்கையின் முட்டை

oliveridleyturtles-kNSG--621x414@LiveMint

சென்னை பெசென்ட் நகர் கடற்கரையின் விளிம்பில் அமைந்துள்ளது ‘ஆமை கொட்டாய்’ என்று ஆழைக்கப்படும் ஆமைகளின் முட்டைகள் காப்பகம். வெவ்வேறு மண்ணில் புதைந்து இருக்கும் ஆமை முட்டைகளை எடுத்து வந்து, புறச்சூழலால் உயிர் இழக்காமல் இருக்க இங்கு அடைகாப்பர். ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின் போது அந்த முட்டையில் இருந்து வெளிவந்து முதன் முதலாய் பிரபஞ்சத்தைப் பார்க்கும் அந்தக் கண் திறவா குஞ்சுகளை கடல் அலைகளின் திக்கில் விடுவிப்பார்கள். அது ஒரு பொது நிகழ்வாகவே அங்கு நடக்கும் .

அதே போல் ஒரு நாள் மாலை ஆமைக்குஞ்சுகள் இருக்கும் கூடையை கரையில் விடுகின்றனர். ஒரு கூடையில் சுமார் நூறு குஞ்சுகளுக்கு மேல் இருக்கும்.அந்தக் குஞ்சுகள் தானாகத்தான் கரையில் இருந்து கடலைச் சென்று அடைய வேண்டும். எந்தக் குஞ்சையும் கையால் எடுத்து கரையில் இருந்து கடலுக்குள் விடமாட்டார்கள். விடக்கூடாது என்பது இயற்கையின் விதி. அந்தக் குஞ்சுகள் நிலவின் ஒளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், இந்தப் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக்கொள்ள உறுதுணையாக இருக்கிறது. இந்த சக்தியின் நினைவானது அதனுடனே தங்கி விடுகிறது. இவ்வாறு அந்தப் பெருங்கடலில் விடுவிக்கப்படும் குஞ்சுகளில் ஆயிரத்தில் ஒன்று மட்டுமே தனது உயிரை தக்க வைத்துக் கொள்கிறது. அந்த ஒற்றை ஆமை உலகின் கடல் பரப்பை எல்லாம் அனுபவித்து விட்டு மீண்டும் தன் முட்டையை இதே கடற்கரையில் தான் வந்து இடும். அது தர்கத்த்திற்கு அப்பால் ஆன இயற்கை.

பாட்ஷா என்ற வயதாகிய ஒரு மாநிற நாயும் அந்தக் கொட்டாயில் வசித்து வந்தது. ஆமைக் குஞ்சுகளை உணவாக்கிக் கொள்ள விரும்பும் பிற நாய்களிடம் இருந்து குஞ்சுகளை காப்பது தான் அதன் கடமை. அன்று மாலை அனைத்துக் குஞ்சுகளும் அந்த  பெருங்கடலை சென்றடைந்து விட்டது,ஒன்றைத் தவிர.
அந்த ஒற்றை ஆமை கடல் சேர்வதைக் காண,மக்கள் கூட்டம் கலைந்த பின்னரும் இருவர் மட்டும் கரையிலேயே நின்று கொண்டு அந்த ஓர் ஆமைக்குஞ்சு கடல் சேர காத்திருந்தனர். நிலவின் ஒளியை நோக்கி மிகப் பொறுமையாக தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி தவழ்ந்தது அந்த
ஆமைக் குஞ்சு.இரண்டு மணி நேரம் கழித்து நம்பிக்கையுடன் கடலைத் தொட இருக்கும் அந்த குஞ்சை காக்க பாட்ஷாவும் காத்திருந்தது.

இமை நொடிக்கும் பொழுதில் பாட்ஷாவின் கால்களுக்கு இடையில் இருந்து வெடித்தெழுந்தது ஒரு பெரும் நண்டு. அதன் ஓடு நிலவை பிரதிபலித்தது. அந்த நண்டு வேகமாக தன் இரையான அந்த ஆமைக் குஞ்சை நோக்கி பாய்ந்தது. அதைக் கண்டுணர்ந்த பாட்ஷாவும் பாய்ந்தும்  அவனால் அந்தக் குஞ்சை காப்பாற்ற இயலவில்லை.

ஆனால் அவனுக்கு முன் அந்த கடலலையின் கருணை அந்த ஆமைக் குஞ்சை அவளுள் சேர்த்துக் கொண்டது.பல வருடங்கள் கழித்து அந்தப் பேரலை மீண்டும் இதே கரையில் அந்த குஞ்சை ஆமையாக கொண்டு சேர்க்கும்.

முட்டையிட.

நம்பிக்கைகளின் முட்டைகளை…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top