‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’…….
‘நிலத்தடி நீர் காப்போம்’…..
இவ்வாறு பல்வேறு கோஷங்களும், மேற்கோள்களும் காதில் விழுந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிலத்தடி நீர், ஏனைய நீர் நிலைகள், சுற்றுப்புற சூழல் மற்றும் மரத்தை பாதுகாக்க வேண்டி போராடி வருகின்றோம்.
அதே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் காகிதத்தின் வாயிலாக எத்தனை எத்தனை மரங்களும், லிட்டர் கணக்கில் நீரும் வீணாவதை நாம் கவனித்திருக்கிறோமா??? இதனை மனதில் கொண்டு காகித மறுசுழற்சி பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி எண்ணிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்……………
“ஏதோ ஒரு குழந்தையின் பிரார்த்தனையால்”
என்ற வாக்கியத்தியதை மெய்ப்பிக்கும் வகையில் ஜூலை 8 ஆம் தேதி காலை ‘குக்கூ’ காட்டு வெளி பள்ளியில் காலை பொழுது எவ்வித சலனமும் இன்றி இனிதே விடிந்தது. நெல்லிவாசல் கிராம பள்ளியின் சூர்யா என்ற சிறுவனின் கள்ளம் கபடமில்லா சிரிப்புடன் சுவாரஸ்யமான உரையாடல் தொடங்கியது. குழந்தைகளிடம் தான் எத்தனை ஒரு தயக்கம் நம்மிடம் உரையாட? அவர்களிடம் இருந்த பேரார்வமே நம்மின் ஒளி கீற்றாக மாறி நம்மை வழி நடத்தியது.
ஒரே ஒரு காகிதம் தயாரிக்க எத்தனை எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன, அதனுள் எத்தனை லிட்டர் மறைநீர் அடங்கியுள்ளது என்பதை அவர்கள் வாய் வழி சொல்லி கேட்க நாம் எடுத்த முயற்சி வீண் போகவில்லை. உரையாடல்கள், கதைகள், காணொளி, என்று சிறுவர்கள் நம்முடன் பயணிக்க முனைந்தாலும், இயற்கையுடன் ஒன்றி காட்டுக்குள் சென்றவுடன் அவர்களுக்குள் இருந்து வெளிப்பட்ட ஆர்வமிகுந்த தனித்திறன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தியது. காதை பிளக்கும் ‘விசில்’ சத்தமாகட்டும், நாம் எரியும் ஒவ்வொரு கல்லையும் பந்தாக பாவித்து ஒரு மட்டை கொண்டு லாவகமாக அவர்கள் அடித்த விதமாகட்டும், அவர்களுக்கு நிகர் அவர்களே!!! கீழே விழுந்த இலைகளையும், பூக்களையும், சேகரித்துக் கொண்டே ஒருவருக்கொருவர் சுய அறிமுக உரையாடல்களுடன் காட்டை விட்டு வெளியேறி வந்து சேர்கையில் அனைவர் முகங்களிலும் ஒரு சிநேக புன்னகை குடியேறி இருந்ததை உணர முடிந்தது.
சிறு இடைவேளைக்கு பின் காகிதம் செய்யும் சட்டங்களுடன், காகித கூழ் நிரம்பிய பெரிய தொட்டியின் முன்பு நமது அறிவுறுத்தலுக்காக சிறுவர்கள் குழுமி இருந்தனர். ஒரு முறை செய்முறை விளக்கம் அளித்தவுடன், ஆர்வம் பொங்க களத்தில் குதித்து ஒன்றிரண்டு பிழைகளுக்கு பின், காகிதத்தை சட்டத்தினின்று பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்த துவங்கினர் சிறுவர்கள். மிகுந்த குதூகலத்துடன் காகிதத்தை கிழிப்பதும், அதை கூழாக்குவதும், தண்ணீரில் கரைத்து சட்டத்தில் வடித்தெடுத்து வெய்யிலில் உலர்துவதும் என ஒரு சிறு பட்டாம்பூச்சி போல சுறுசுறுப்பாக இவை அனைத்தையும் கையாண்ட விதம் நம்முள் ஒருவித புத்துணர்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து காகிதக்கூழ் கொண்டு பலூனில் அவர்கள் வடிவமைத்த கைவினைப் பொருளும், அதற்கு அவர்கள் அளித்த பயன்பாடும் புதுமையாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.
ஜூலை 9 ஆம் தேதி புளியனூர் கிராமக் குழந்தைகள் தங்களுக்கு பரிச்சயமான ‘குக்கூ’காட்டுவெளி பள்ளியினுள் சிறகவிழ்த்து ஓடி வந்தனர். நெல்லிவாசல் மற்றும் புளியனூர் குழந்தைகளின் அறிமுக படலம் ‘எண்’ விளயாட்டினூடே துவங்கியது. இவ்வழகிய அறிமுகத்தை பயிற்சியாளர்கள் கையாண்ட விதம் அருமை. இதை அடுத்து காகித மறுசுழற்சியின் பயணம் ஒரு அழகான நாடகத்துடன் துவங்கியது. தாங்கள் கண்ட காணொளியின் கருத்தை நாடகத்தின் வாயிலாக தங்களது பயிற்சியாளர்களுடன் சிறுவர் சிறுமியர் வெளிப்படுத்திய விதம் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது. இவ்விடத்தில் ‘ஆழமான கருத்தை எளிமையான முறையில் நமக்குணர்த்த குழந்தைகளால் மட்டுமே முடியுமோ!!!!!’ என்ற எண்ணம் தோன்றியது. சிறார்கள்இ தனை தொடர்ந்து காகித கூழ் கொண்டு காகிதம் செய்து, காகிதம் கொண்டு கலைநயமிக்க வாழ்த்தட்டை செய்து நாங்கள் பூலோக பிரம்மாக்கள் என்றுணர்த்தினர். நெகிழி என்னும் சைத்தானை கையாள காகித பை உபயோகிப்போம் என்று கூறி, குழந்தைகள் பயிற்சியாளர்களின் உதவியோடு அப்பைகளையும் செய்து மகிழ்ந்தனர்.
மாலையில் தங்கள் கைகளால் செய்த காகித பையினுள் தாங்கள் மறுசுழற்ச்சி செய்து தயாரித்த காதிகிதம் மற்றும் கைவினை பொருட்கள் உள்ளடக்கி மிகுந்த உற்சாகத்துடன் நம்மை நோக்கி கையசைத்து விடை பெற்ற போது,
‘இது இந்நாளின் முடிவல்ல, இது ஓர் இனிய துவக்கம்’
என்று உணர்த்தியது போல் இருந்தது.